Saturday, November 8, 2014

முத்துப்பல்லக்கு

சோறுடைத்த சோழ நாட்டின் சுந்தரத் திருநகர்  தஞ்சையம்பதி!.. 

நீர் வளமும் நிலவளமும் நிறையப் பெற்ற திருத்தலம். 

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட நெஞ்சை அள்ளும் தஞ்சை என்பதும்தஞ்சைத் தரணி என்பதும் - இந்நகரின் சிறப்பு அடைமொழிகள்.. 


புராணச் சிறப்புகள் வரலாற்றுச் சிறப்புகள் என அனைத்தும் ஒருங்கே உடைய தஞ்சை மாநகரில் - 

நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரிய விழாவான முத்துப் பல்லக்குத் திருவிழா, கடந்த ஜூன்/14 சனிக்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது. 

சமய குரவர் நால்வரில் ஒருவரான ஞான சம்பந்தப் பெருமான் முக்தி பெற்ற நாள் வைகாசி மூலம்.  

அந்த நாளினை அனுசரித்து முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் -  ஆனி மாதத்தில் ,

ஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜையின் போது  குறிச்சித் தெரு முருகன்கோவிலில் இருந்து முதன் முதலாக முத்துப் பல்லக்கு  புறப்பட்டதாக கூறப்படுகின்றது. 

இடையில் சிலகாலம்  - பல காரணங்களினால் சற்றே எழில் குன்றியிருந்தது. 




தற்போது - தஞ்சை மாநகரில் உள்ள பெரும்பாலான கோயில்களில் இருந்தும் பல்லக்கு புறப்படுவதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நல்ல மனம் கொண்டஇறையன்பர்கள்  இயன்றவரை பணி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழாவினை முன்னிட்டு தஞ்சை மாநகரின்-

கீழவாசல், ஆட்டுமந்தைத் தெரு, குறிச்சித் தெரு,  அரிசிகாரத் தெரு, 
வார்காரத் தெரு, பட்டு நூல்காரத் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, புல்லுகாரத் தெரு, வண்டிகாரத் தெருமகர்நோன்புச் சாவடி,
கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி,   

- என பல்வேறு பகுதிகளிலிருக்கும் விநாயகர், முருகன் திருக்கோயில்களில் இருந்து நாதஸ்வர இசை முழங்க முத்துப் பல்லக்குகள் புறப்பட்டு கீழ ராஜவீதி மாமாசாகேப் மூலைக்கு வந்து சேர்ந்தன.

(கீழராஜ வீதியும் தெற்கு ராஜவீதியும் சந்திக்கும் இடம். பழைய பேருந்து நிலையத்திற்கு சற்று அருகில்)

பல்லக்குகளில் விநாயகர், முருகன் உற்சவ திருமேனிகள் மற்றும் திருஞான சம்பந்தரின் திருஉருவப்படங்கள் ஆபரணங்களாலும் மலர் மாலைகளாலும்அலங்கரிக்கப்பட்டிருந்தன. 



பல்லக்குகள் பூக்களாலும் பலவண்ண காகிதங்களாலும் மணிச்சரங்களாலும்வண்ண மயமான குஞ்சங்களாலும்  மின் விளக்குகளாலும் தஞ்சைக்கே உரியகலை நயத்துடன் எழிலாக வடிவமைக்கப்பட்டிருந்தன.  



பழைமையான கோயில்களான -   
கரந்தை - கருணாசாமி கோயில்
கீழவாசல் - வெள்ளைப் பிள்ளையார் கோயில்
பாம்பாட்டித்தெரு - சிந்தாமணி பிள்ளையார் கோயில் 
கொள்ளுபேட்டைத் தெரு - பிள்ளையார் கோயில்
குறிச்சித் தெரு - சுப்ரமணியசாமி கோயில்
ஆட்டுமந்தைத் தெரு - தண்டாயுதபாணி சுவாமி கோயில்
சின்ன அரிசிக்காரத் தெரு - சுப்ரமணிய சுவாமி கோயில்
பூக்காரத்தெரு - சுப்ரமணியசுவாமி கோயில்.
ரயிலடி - பிள்ளையார் கோயில்
மாமா சாகேப் மூலை 
- பிள்ளையார் கோயில் 

- இன்னும் சில திருக்கோயில்கள் என -  திருவிழாவில் பதினைந்திற்கும் மேற்பட்ட பல்லக்குகள் தஞ்சையின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்தன. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

மறுநாள் காலை ஏழு மணி அளவில் பல்லக்குகள்-  அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் சென்று சிறப்பு பூஜைகளுடன் நிலை நிறுத்தப் பட்டன. 


புகைப்படங்கள்: 
திரு.கலியபெருமாள் வீராசாமி. (Thanjavur City Pages) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
  
ராஜவீதிகளின் பல இடங்களிலும் சித்ரான்னங்கள் வழங்கலும் அன்ன தானமும் நடைபெற்றது.

முத்துப் பல்லக்கு விழாவினை முன்னிட்டு,  தஞ்சை மாநகரம்  முன்தினம் இரவு விழாக்கோலம் பூண்டிருந்தது. 

ராஜ வீதிகளில் தலையாட்டி பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள், இனிப்பு,பலகார வகைகள் - என, வியாபாரம் விடியும் வரை - களை கட்டியது. 

நூறாண்டுகளையும் கடந்து நடைபெறும் இவ்விழா - தஞ்சை மாநகருக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக அமைகின்றது.  

இவ்விழா  -  தஞ்சை மாநகரை நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சூழலுக்கு அழைத்து சென்றதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


மகிழ்ச்சியும் மன நிறைவும் என்றென்றும்  நிறைந்திருப்பதாக!..

வாழ்க வையகம் .. வாழ்க வளமுடன்!.. 

No comments:

Post a Comment