Saturday, November 8, 2014

ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா

யுத்தத்தில் வெல்வதற்கு வேறொன்றும் வழி இருப்பதாகத் தெரியவில்லை அவனுக்கு!.. ஆழ்ந்து சிந்தித்தான். 

அவன் சிந்தனையில் புலப்பட்டது - அந்த யாகம்!.. 

சிந்தித்தவன் - இந்திரஜித். இராவணனின் அன்பு மகன். 
அவன் சிந்தனையில் தென்பட்ட யாகம் - மஹாகாளியைக் குறித்த யாகம்!..

அந்த விநாடியே - ஆயத்தமாகி யாகத்தைத் தொடங்கினான் - யாரும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லாத - ரகசியமான - நிகும்பலா எனும் இடத்தில்!..

ஆனால் - அதையும் தன் ஒற்றர்கள் மூலமாக அறிந்தான் விபீஷணன்.  மின்னலென - அந்த செய்தியை பெரிய பெருமாளுக்கு அறிவித்தான்.

இந்த யாகம் மட்டும் நிறைவேறி - இந்திரஜித்தின் கரங்களால் - அன்னை பூரணாஹூதியை ஏற்றுக் கொண்டு விட்டால்!?...

சரி.. யாகம் யாரைக் குறித்து?..


அதர்வண காளி  - ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவியைக் குறித்து!..

ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியிடம் சூழ்நிலையின்  அவசரம் உணர்த்தப்பட்டது.

கடுஞ்சினத்துடன் புயலெனச் சுழன்று எழுந்தான் இளைய பெருமாள்.

காகுத்தனின் ஆசிகளுடன்  புறப்பட்டான். வாயு மைந்தனும் உடன் சென்றான். 

காற்றும் அணுக முடியாத இடத்தில் இருந்த யாக சாலைக்குள் நுழைந்தான். 

அந்த நேரம் யாகத்தில் பூரணாஹூதி கொடுக்கும் நேரம். 

ஆனால் இது வரைக்கும் அன்னை ப்ரத்யட்க்ஷமாகவில்லையே என்ற கவலையில் இருந்த இந்திரஜித் நிலைகுலைந்தான். 

புயலெனப் புகுந்த இளைய பெருமாளின் நோக்கம் புரிந்து விட்டது - இராவணனின் மகனுக்கு!..  

எதிர்க்கணை தொடுப்பதற்குள் - வாயு வேகம் மனோ வேகமாக நொடிப் பொழுதிற்குள் - நிகும்பலா யாக சாலை - இளையபெருமாளின் கணையினால் நிர்மூலமானது. 

அடாத எண்ணம் கொண்ட  அரக்கர் கோமானின் மகன் -  அக்ரமத்திற்குத் துணையாக வேண்டி - அன்னை மஹா பத்ரகாளியை நோக்கி நடத்திய யாகம் பயனற்றுப் போனது. 

கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாததைக் கண்டு கடும் சீற்றத்துடன் எழுந்த இந்திரஜித் ஆயுதம் ஏந்தினான். கடும்போர் புரிந்தான். 

முடிவில் இளையபெருமாளின் கூரிய கணைகளுக்குப் பலியாகி வீழ்ந்தான்.

இளைய பெருமாளின் கணைகள் - தன்னைக் குத்திக் குடைந்ததெல்லாம் - மாவீரனான  இந்திரஜித்திற்கு ஒரு பொருட்டாகவே இல்லை!..

அன்னை ஸ்ரீ பத்ரகாளி ஏன் வரவில்லை!.. - என்ற ஒற்றைக் கேள்வியே - அவனைக் குடைந்த கூரம்பு!..

அவனது கடைசி நொடியில் - அவனைக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு கிடைத்த விடை!...


அதர்மத்திற்கு என்றும் துணையாக மாட்டாள் - 
அதர்வண காளி எனும் ஸ்ரீ மஹாப்ரத்யங்கிரா தேவி!..

அநீதியை அழிப்பதில் அவளுக்கு நிகர் அவளே!..

தன்னைச் சரணடைந்த உயிர்களைக் காப்பதில் அவள் தாமதம் செய்ததே இல்லை. இத்தகையவள் - எப்படித் தோன்றினாள்!..

எங்கே உன் ஹரி?.. - இடியென முழங்கினான் ஹிரண்யன்..

அவனுக்கு இனிமையுடன் பதில் கூறினான் ப்ரஹலாதன்.

அவன் தான் எங்கேயும் இருக்கின்றானே!.. சாணிலும் உளன். ஓர் தண்மை அணுவினைச் சத கூறிட்ட கோணினும் உளன். மாமேருக் குன்றிலும் உளன்!..

ஏய்!.. அதையெல்லாம் விடு!.. இங்கே இருக்கின்றானா?.. இல்லையா?..

இங்கே அங்கே என்று எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கின்றவன் - அவன்!..

இங்கே - இந்தத் தூணில் இருக்கின்றானா?.. - கடுங்கோபத்துடன் கர்ஜித்தான்.

இந்நின்ற தூணிலும் உளன். நீ சொன்ன சொல்லிலும் உளன்!..

அப்பா!.. உங்களுக்கு ஏன் இப்படி மனக்குழப்பம்!.. மேரு எனும் மாமலையில் இருப்பவன் - இந்தத் தூணில் இருக்க மாட்டானா!.. உங்கள் மனதிலிருந்து நீங்கள் சொல்லிய  சொல்லில் கூட - ஸ்ரீமந்நாராயணன் இருக்கின்றானே!..

விளைவு!.. ஹிரண்யன் - அங்கிருந்த பெருந்தூணைப் பிளந்தான்.


தூணின் உள்ளிருந்து - ஸ்ரீ நரசிங்கமாக வெளிவந்த - ஸ்ரீஹரி பரந்தாமன் - ஹிரண்யனின் தேகத்தைப் பிளந்தான்.

இப்படி அவதரித்த ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி அப்போதைக்கு உக்ரம் தணிந்தாலும் - ஹிரண்யனின் மார்பைப் பிளந்து அவன் உயிரைக் குடித்திருந்த காரணத்தினால் உக்ரம் தணியாதவராகவே திகழ்ந்தார். 

அதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்தனர். அதன் பிறகு நிகழ்ந்தவை அனைத்தும் திருவிளையாடல்கள். 

நரசிம்மரின் உக்ரத்தைத் தணிப்பதற்காக சிவபெருமான் கொண்ட திருக் கோலம் ஸ்ரீசரபேஸ்வரர்.


சிறகுகளுடன் கூடிய சிங்கமாக சற்றே மனித ரூபமும் கலந்து வந்த  திருக் கோலம் அது!..

நரசிம்மர் அண்ட பேரண்ட பட்சியாகி எதிர்த்தார். அவரை அன்புடன் ஆரத் தழுவி - தன் சிறகுகளால் விசிறி - சாந்தப்படுத்தினார் சரபேஸ்வரர்.


ஸ்ரீசரபேஸ்வரரின் சிறகுகளில் இருந்த சக்தி அம்சங்கள் தான்  - மஹா காளியும்மஹா துர்கையும்!..

ஸ்ரீ சரபேஸ்வரரின் இரு சிறகுகளில் ஒன்றில் ஸ்ரீ அதர்வண காளி!..
மற்றொன்றில் ஸ்ரீ சூலினி துர்கா!..

அந்த வேளையில், அதர்வண காளியின் பிரயோக மந்த்ரங்களை - அங்கிரஸ், ப்ரத்யங்கிரஸ் எனும் மகா முனிவர்கள் உய்த்து உணர்ந்ததால் - 

தேவி - ஸ்ரீ மஹாப்ரத்யங்கிரா எனும் திருப்பெயர் கொண்டாள்.

ஸ்ரீ அகஸ்திய முனிவர் சிவபூஜை செய்த - ஒரு தருணத்தில் ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா  தேவி அவருக்குத் திருக்காட்சியளித்தனள். 

துரியோதனனால் வஞ்சிக்கப்பட்ட பாண்டவருக்கும் த்ரௌபதிக்கும் நலம் அளிக்க விரும்பிய ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி  - அதற்கான பூஜா வழிமுறைகளை அவர்களுக்கு உபதேசிக்கும் படி  - அகஸ்திய மகரிஷிக்கு அருளாசி புரிந்தாள்.

அன்னையின் ஆணையை சிரமேற்கொண்ட  அகஸ்திய மகரிஷியும் - பஞ்ச பாண்டவருக்கு குருவாக இருந்து பூஜா முறைகளை உபதேசித்து அவர்கள் உய்யும் வழியினைக் காட்டியருளினார்.

குரு உபதேசம் பெற்ற பாண்டவர்கள் - அகஸ்திய மகரிஷி காட்டிய வழியில் அன்னையை வணங்கி பின்னை நாளில் கௌரவர்க்கு எதிரான போரில் - வெற்றிக் கொடி நாட்டும் வல்லமையைப் பெற்றனர் என்பது ஐதீகம்.


வருந்தி அழைத்தவருக்கு - வஞ்சக யாகத்தில் திருமுகம் காட்டாதவள்!..
வாழ்விழந்து வருந்தி அலைந்தவர்க்கு வழிகாட்டியாக வந்தவள்!.. 

அவளே -  ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி!..

அன்னை உவந்து உறையும் திருத்தலமே - ஐயாவாடி!..

இதுவே - ஸ்ரீமஹா பிரத்யங்கிரா முதற்பொருளாக அமர்ந்த திருத்தலம்!..

இத்திருத்தலத்தில் இவளும் தனியளாக இல்லை.  

ஸ்ரீ அகஸ்தியர் பூஜித்த - ஸ்ரீ தர்மசம்வர்த்தனி அம்பிகை உடனாகிய  ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலின் உப சந்நிதியாக - திருக்கோயில் கொண்டு விளங்குகின்றனள்.

இத்திருக்கோயிலைச் சூழ்ந்து எட்டு திக்குகளிலும் மயானங்கள். 

எனவே - திருக்கோயிலில் தனிப்பட்ட அர்ச்சனை கிடையாது. தேங்காய் உடைப்பது இல்லை. கற்பூர ஆரத்தி கிடையாது. பூஜா மணிகள் ஒலிப்பதும் இல்லை. திருவீதி எழுந்தருளல் - திருவிழா என எதுவும் கிடையாது.  

 ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி சந்நிதியும் அருகிருக்கும் ஸ்ரீ தர்மசம்வர்த்தனி அம்பிகை சந்நிதியும் மிக மிக  அமைதியாக இருக்கும். 

விசேஷ தினம் என்றால் - அமாவாசை நாள்தான்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் - பௌர்ணமி நாளின் நள்ளிரவிலும் யாகம் நிகழ்ந்தது.

திருக்கோயில் மக்களிடையே பிரபலமாகியவுடன் - சில நிர்பந்தங்களைத் தவிர்க்கும் வண்ணம் பௌர்ணமி பூஜை நிறுத்தப்பட்டது. 

தற்போது அமாவாசை பூஜை மட்டுமே!..

அமாவாசை நாட்களில் மட்டுமே - ஆயிரக்கணக்கில் மக்கள்  கூடி ஆரவாரிக்க - ஸ்ரீ மஹாப்ரத்யங்கிரா தேவிக்கு மஹா யாகம் நிகழும்.

அந்த யாகத்தில் கூடை கூடையாக கொட்டப்படும் பூர்ணாஹூதி - உலர்ந்த மிளகாய்களே!..

சாதாரணமாக மிளகாய் வற்றல் தாளிக்கும் போதே - காரமான நெடி ஏற்படும். 

ஆனால் - இங்கே - ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவிக்கு நிகழும் யாகத்தில் சுழன்றெழும் அக்னியில் - கூடை கூடையாக உலர்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டும் - எந்த வித நெடியும் கமறலும் ஏற்படுவதில்லை என்பது கண்ணாரக் கண்ட உண்மை.

வடக்கு நோக்கிய திரு மூலஸ்தானம். 

உக்ரமான சிங்க முகம். ப்ரகாசமாக ஒளி தரும் சுடர் விளக்குகள் அன்னையின் திருமுகத்தை விளக்குகின்றன. 

திருமுடியில் சந்திர கலையுடன் இருபுறமும் லக்ஷ்மியும், சரஸ்வதியும் திகழ சிங்க ரதத்தில் வீற்றிருக்கிறாள். 

பல்வேறு ஆயுதங்களுடன் பதினெட்டுத் திருக்கரங்கள். அவற்றுள் சூலம், கபாலம்,பாசம், டமருகம் ஆகியன எளிதில் புலப்படுகின்றன. 

ஸ்ரீமஹா ப்ரத்யங்கிரா தேவியின் சந்நிதியில் அர்ச்சனை வழிபாடுகள் இல்லை. நெய் தீப ஆராதனை மட்டுமே!. 

வெளியிலிருந்து வரும் மாலைகள் தவிர்க்கப்படுகின்றன. அவள் சந்நிதியில் அமர்ந்து தொடுக்கப்படும் பூச்சரங்கள் எலுமிச்சம்பழ மாலைகள் - இவற்றை ஏற்றுக் கொள்கின்றனர்.

மணம் மிகுந்த குங்கும ப்ரசாதம் தருகின்றார்கள். கூட்ட நெரிசலான காலம் தவிர்த்து மற்ற நாட்களில் அன்னையின் சந்நிதியில் தரிசனம் செய்பவரை -  நகருங்கள் என்று சொல்வதேயில்லை. 

தஞ்சை மாவட்டத்தில் - கும்பகோணத்தை அடுத்துள்ளது திருநாகேஸ்வரம். இத்தலத்தின் ஒருபுறம் தான் ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயில்.

ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் இருந்து 2 கி.மீ தொலைவு - ஐயாவாடி.

அமாவாசை அன்று கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பெரும்பாலான நகர பேருந்துகள் ஐயாவாடிக்குத் தான்!.. மற்ற நாட்களில் பேருந்துகள் குறைவு.  திருநாகேஸ்வரத்தில் இருந்து ஆட்டோக்களில் சென்று வரலாம்.

ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா - ஐயாவாடி
அமாவாசை ஒருநாள் மட்டும் காலை ஆறு மணி முதல் இரவு ஏழரை மணி வரை அன்னையின் சந்நிதி திறந்திருக்கும். 

அமாவாசை தினங்கள் தான் உகந்தவை என்றில்லை. அவளைத் தரிசிப்பதற்கு எந்த நாளும் உகந்தவை. 

இரவு ஏழரை மணிக்குப் பின்  அங்கே இருக்க எவரையும் அனுமதிப்பதில்லை. 

அன்னையின் சந்நிதிக்கு வெளியே மஹாமுனீஸ்வரர் பிரம்மாண்டமாக வீற்றிருக்கின்றார். 

அங்கிருக்கும் பூஜாரிகளைக்  கேட்டுக் கொண்டால் திருஷ்டி கழிக்கின்றனர். 

இன்று ஆடி மாதத்தின் - நான்காவது ஞாயிறு!.. 

அவளருளால் - திருவக்கரை ஸ்ரீ வக்ர காளியை அடுத்து - 
ஐயாவாடி ஸ்ரீ மஹாப்ரத்யங்கிரா தேவி தரிசனம்.

ஸ்ரீ மஹாப்ரத்யங்கிரா தேவியின் உருவப்படங்களை வீட்டில் வைத்து பூஜிக்க வேண்டாம் என்று எழுதிப் போட்டிருக்கின்றார்கள். ஆனாலும் கோயிலின் அருகே அவளுடைய படங்களையும் மக்கள் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆர்வ மிகுதியால் விலை கொடுத்து வாங்கிய படங்களை - ஒரு கட்டத்தில் கேட்பாரற்ற கோயில் மண்டபங்களில் போட்டு விட்டு - வேறு வேலையைப் பார்க்கப் போய் விடுகின்றார்கள். அது தவறு என்பதை உணரவில்லை.

இன்றைய நாட்களில் - அவளுடைய மூலமந்த்ரமும் உபாசனையும் பூஜை முறைகளும் - மனம் போனபடி ஆன்மீக ஏடுகள் என்பனவற்றில் வெளியிடப் படுகின்றன.

அதெல்லாம் மிகப் பெரிய விஷயங்கள்.

தகுந்த குரு உபதேசமாகப் பின்பற்றப்பட வேண்டியவை.

துன்பமும் துயரும் சூழ்கின்ற வேளையில் அவளது திருப்பெயரைச் சிந்தித்தல் ஒன்றே போதும்!.. 

அவள் சந்நிதிக்குச் செல்லும் எவரும்  - அவர்கள் அழிய வேண்டும் .. இவர்கள் ஒழிய வேண்டும்.. - என்று வேண்டிக் கொள்ளாதீர்கள்!..

நம்மை நாம் அறியோம்!.. ஆனால் - அவள் அறிவாள்!..

அவள் சந்நிதியில் துன்பமும் துயரமும் அழிகின்றன. கவலையும் கஷ்டமும் ஒழிகின்றன. அது போதாதா நமக்கு!.. 

அன்புடன் அவளை நினைத்தாலே தோள்களில் வீரம் தானாக வந்தமர்கின்றது. 

அது யாரையும் அழிப்பதற்காக அல்ல!.. 
நம் வினைகளை நாமே வெல்லுவதற்கு!..

ஓம்  சக்தி ஓம்..
ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா திருவடிகள் சரணம்!..
* * *

No comments:

Post a Comment