Saturday, November 8, 2014

அதிபத்த நாயனார்

செயற்கரிய செய்து சீர் பெற்றோரை  நாயன்மார்கள் என்றனர் பெரியோர்.

அந்த வகையில் சைவம் குறிக்கும்  நாயன்மார்கள் அறுபத்து மூவர்.  

அத்தகைய பெருமக்களுள் ஒருவர் - அதிபத்த நாயனார்.

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்!.. - என்று சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்  திருத் தொண்டர் திருத்தொகையில் இவரைப் போற்றுகின்றார். 

ஏன் !.. எதனால்!.. 


பொன்னி நதி நலம் கொழிக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் கரைகளில் தேவாரப் பதிகம் பெற்று விளங்கும் தலங்களுள் திருநாகைக் காரோணமும் ஒன்று. 

திருநாகைக் காரோணம் காவிரியின் தென்கரைத் திருத்தலம் ஆகும். 

மிகப் பழமையானது. பல்வேறு புராண வரலாறுகளைக் கொண்டது.

நாகராஜன் வழிபட்ட சிறப்புடையதால் நாகப்பட்டினம் என்பதும், ஊழிக் காலத்தில் அனைத்தும் இங்கு ஒடுங்குவதால் இத்தலம் சிவராஜதானி என்பதும் தலபுராணக் குறிப்பு.


காஞ்சி, கும்பகோணம், நாகை ஆகிய மூன்று தலங்களில் மட்டுமே -  காயாரோகணர் என்ற திருப்பெயருடன் - ஈசன் திகழ்கின்றனன்.


கருந்தடங்கண்ணி எனப் புகழப்படும் அன்னை ஸ்ரீ நீலாயதாக்ஷியின் சந்நிதி சக்தி பீடங்களுள் ஒன்றென விளங்குவது.

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, ஆரூர் கமலாயதாட்சி, நாகை நீலாயதாட்சி - என்பது சொல்வழக்கு.

திருநாகைக் காரோணம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. நாகையில் சுந்தர விடங்கர். வீசி நடனம்.

தீர்த்தம் - புண்டரீக தீர்த்தம். தலவிருட்சம் - மாமரம்.

சுந்தர மூர்த்தி நாயனார் - குதிரை, நவரத்னங்கள், பொன்மணிகள், முத்து மாலை, பட்டு ஆடைகள் முதலிய ஐஸ்வர்யங்களை வேண்டிப் பெற்ற தலம்.

நாகப்பட்டினம் என்று தற்போது வழங்கப் பெறும் - கடல் நாகைக் காரோணம் சோழர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய சிறப்பினை உடையது.

யானைகளையும் மணிகளையும் முத்துக்களையும் மயிற்தோகைகளையும் அகில் சந்தனம் மிளகு ஏலம் - என இவற்றை வாங்குதற் பொருட்டும் உயர் இன குதிரைகள், கண்கவர் பட்டுத் துகில்  இவற்றை விற்பதன் பொருட்டும் எழுந்த ஒலியினால் மகிழ்ந்திருந்தது  - நாகை.

வலைகளைக் கடலுக்கு இழுத்துச் செல்வோர்கள் எழுப்பிய ஒலியினாலும் கடலினின்று கரைக்கு ஏற்றிய வெண்ணிறச் சங்குகளையும் சிறந்த மீன்களை விலை கூறி விற்பவர்கள் எழுப்பிய ஒலியினாலும் நிறைந்திருந்தது - நாகை.

இத்தகைய அரும்பெரும் சிறப்புகளை உடைய கடல் நாகைக் காரோணத்தின் கடற்கரையோரத்தில் செழுமையுடன் விளங்கிய மீனவர் குப்பங்களுள் ஒன்று நுளைப்பாடி.

அங்கே - மீனவப் பெருங்குலத்தில் பிறந்தவர் - அதிபத்தர்.

அதிபத்தர்  இளமை முதற்கொண்டே சிவபக்தி உடையவராக விளங்கினார். 

நாகையில் ஆலயம் கொண்டு விளங்கும் பெருமானிடம் அளவற்ற அன்பு கொண்டு நாளும் பல நல்லறங்கள் புரிந்தார்.  

தனக்கு விதிக்கப்பட்ட வாழ்கையினின்று வழுவாது நேர்மையுடன்  தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தார்.

பல மீனவக் குடும்பங்களுக்குத் தலைவராக விளங்கினார் அதிபத்தர்.

வலை வீசிப் பிடித்த மீன்களைக் குவித்து -  அவற்றைத் தரம் பிரித்து - நாடி வருவோர்க்கு நியாயமாக விற்பனை செய்து, நேரிய வழியில் பொருளீட்டி பெருஞ்செல்வத்தினை உடையவராய் - அது கொண்டு தன்னைச் சார்ந்தவர் பலரையும் ஆதரித்து அதனால் உயர்ந்தவராய் விளங்கினார்.


நாளும் தன் கூட்டத்தினருடன் கடலோடி வலை வீசி மீன் பிடிக்குங்கால் - வலையினில் அகப்படும்  முதல் மீனை சிவார்ப்பணம் என்று கடலிலேயே விட்டு விடுவது அவரது பழக்கமாக இருந்தது. 

அது சாதாரண மீனாக இருந்தாலும் சரி.. உயர்தர மீனாக இருந்தாலும் சரி!.. 

மீன்பாடு அதிகமானாலும் குறைந்தாலும் தனது பழக்கத்தில் வழுவாதவராக விளங்கினார் - அதிபத்தர்.

இளமையிலிருந்து இவரைப் பற்றி அறிந்திருந்த உற்றாரும் மற்றோரும் இவரது பக்தியைக் கண்டு வியந்து  - நம் குலத்தில் இப்படியோர்  மகன் பிறக்க நாம் என்ன தவம் செய்தோமோ!.. என்று மகிழ்ந்திருந்தனர்.

ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க முனைந்தது எல்லாம்வல்ல சிவம்.

அதன் விளைவு - கடலில் மீன்பாடு குறைந்தது. 

விரிந்து பரந்து விளங்கிய கடலில் நீரோட்டம் உணர்ந்து ஆங்காங்கே சென்று வலைகளை வீசினாலும் - ஒற்றை மீன் மட்டுமே கிடைத்தது.

அச்சமயத்தில் அந்த மீனையும் சிவார்ப்பணம் என்று கடலில் விட்டு விட்டு வெறும் கையோடு கரைக்குத் திரும்பும்படி ஆயிற்று. 

வளங்கொழித்து விளங்கிய மீனவர் குடும்பங்கள் வறுமையில் வாடின. அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக் கொடுக்காதவராகி - தனது கைப் பொருளைக் கொண்டு - தன்னைச் சார்ந்திருந்த மக்களை வாழவைத்தார். 

இதை அறிந்த ஏனைய குப்பத்தினர் - ஏளனஞ்செய்து நகைத்து மகிழ்ந்தனர்.

மனந்தளராத அதிபத்தர் வழக்கம் போல கடலுக்குச் சென்று வலை வீசினார். 

அன்று வழக்கத்துக்கு மாறாக -  தங்க மீன் ஒன்று வலையில் சிக்கியது.  

பசும் பொன்னாலும் ஒளி மிக்க மணிகளாலும் ஆனதோ - இது!.. - என காண்பவர் திகைக்கும் வண்ணமாக இருந்தது அந்த மீன்.

பல நாள் பஞ்சத்தில் தவித்திருந்த மீனவர்கள் - இன்றுடன் நம் கவலைகள் எல்லாம் தீர்ந்தன!.. - என ஆனந்தம் கொண்டனர். ஆனால் -

இந்த மீனுக்கு ஈடாக இவ்வுலகில் யாதொன்றும் இல்லை!.. என அந்தப் பொன் மீனைக் கையிலேந்தி மகிழ்ந்தார் அதிபத்தர் . 

இப்பொன்மீன் எம்மை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க!.. - என்று அதனை கடலில் விடுதற்கு முனைந்தார். 

உடனிருந்த மீனவர்கள், வறுமையால் தளர்ந்திருக்கும் வேளையில் இதனைக் கடலில் விட வேண்டாம்!.. -  எனக் கூறித் தடுத்தனர். 

ஆனால் -  சிவம் எனும் செம்மையில் ஒன்றியிருந்த அதிபத்தர் சிவார்ப்பணம்என்று சொல்லி, அந்தத் தங்க மீனைக் கடலில் விட்டு விட்டார். 


அந்த வேளையில் - அவரது பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அம்பிகையுடன் விடை வாகனத்தில் திருக்காட்சி நல்கி முக்தி அளித்தார்.

செயற்கரிய செய்வார் பெரியர்  - எனும் வேத வாக்கின் படி - பின்னாளில் அதிபத்தரைப் போற்றி வணங்கினார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

நாமும் கைகூப்பி வணங்கிட -  நாயன்மார்களுள் ஒருவராக இடம் பெற்றார் அதிபத்தர்.

அதிபத்தர் குருபூஜை விழா - ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரம். 

அதன்படி இன்று (ஆகஸ்ட்/24) நாகையில் அதிபத்தர் குருபூஜை நடக்கிறது.

இன்று அதிபத்தர் உற்சவராக ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார். அப்போது மீனவர்கள் இரண்டு தங்க மீன்களை வலையில் வைத்து கடலில் பிடித்ததைப் போல பாவனை செய்வர்.

நன்றி - நாகை சிவம்
அவ்வேளையில்  சிவபெருமான், கடற்கரையில் எழுந்தருள - அவருக்கு அதிபத்தர் வலையில் கிடைத்த தங்க மீனைச் சமர்ப்பித்து வழிபடுவார்.

நன்றி - நாகை சிவம்
அந்த வேளையில்  சிவபெருமான் ரிஷப வாகனத்தில்  திருக்காட்சி நல்குவதாக  வைபவம் நிகழும்.

மாலை நேரத்தில் - நாகை கடற்கரையில் நிகழும் விழாவின் போது மட்டுமே தங்க மீனை பார்க்க முடியும்.

அதிபத்தர் வாழ்ந்த நுளைப்பாடி இன்று நம்பியார் நகர் என விளங்குகின்றது.

 
நாகை எல்லைக்குள்,  - புராணச் சிறப்பும், பழமையும் வாய்ந்த பன்னிரண்டு சிவாலயங்கள் உள்ளன.

ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி,
மஹாவிஷ்ணு வழிபட்ட அழகேஸ்வரர்,
நான்முகன் வழிபட்ட மத்யபுரீஸ்வரர்,
இந்திரன் வழிபட்ட அமரேந்திரேஸ்வரர்,

மீனாட்சிசுந்தரேஸ்வரர் (அக்கரைக் குளம்), 
புண்டரீக முனிவர் வழிபட்ட ஆதி காயாரோகணேஸ்வரர்,
ஆதிசேஷன் வழிபட்ட நாகேஸ்வரர்,
வீரபத்ரர் வழிபட்ட விஸ்வநாதர்,

அகஸ்தியர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர் (வெளிப்பாளையம்)
தேவர்கள் வழிபட்ட அமிர்தகடேஸ்வரர்,
பராசரர் வழிபட்ட கயிலாய நாதர்,
வேதங்கள் வழிபட்ட காசி விஸ்வநாதர்,

மகாசிவராத்திரியின் போது மேற்குறித்த பன்னிரண்டு ஆலயங்களையும் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர்  தரிசிப்பர். 

ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி திருக்கோயிலில் அதிபத்தருக்கு சந்நிதி உள்ளது. 

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் - என தேவார மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம்.

ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியாது எழுந்தொண்டர்
காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே!..(1/84)
திருஞான சம்பந்தர்.

அதிபத்த நாயனார் போல வாழ நம்மால்  இயலாவிடினும்  - உண்ணும் போது முதற்கவளத்தினை சிவார்ப்பணம் செய்து வழிபடுவோம்.

சீர் கொண்ட சிவம் சிந்தையில் சுடராக நிற்கும்!..

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்!..
அதிபத்தர் திருவடிகள் போற்றி!.. போற்றி!..
சிவாய திருச்சிற்றம்பலம்
* * *

No comments:

Post a Comment