Saturday, November 8, 2014

அம்பிகை புற்றுருவாக எழுந்து அருள்பாலிக்கும் தலங்களுள் முதன்மையான திருத்தலம்!..  

மாரியம்மன் வீற்றிருக்கும் தலங்களுள் புகழ் மிக்கதாகத் திகழும் திருத்தலம்!. 

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் 88 திருக்கோயில்களுள் ஒன்றாக விளங்குவது!..

ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமிகளால் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்யப்பெற்றது!.

மகான் ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் பல்லாண்டுகள் தங்கியிருந்த புகழுடையது!.


மாயி மகமாயி மணிமந்திர சேகரியே
ஆயி உமைஆனவளே ஆஸ்தான மாரிமுத்தே!..
மாநிலத்தைப் பெற்றவளே மாதரசி வாருமம்மா 
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா!..

இத்தனை சிறப்பு மிக்க திருத்தலம் - புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில்!..

தஞ்சை மாநகரின் கிழக்கே அமைந்துள்ள திருக்கோயில்.

புன்னை வனம் எனப்பட்ட தலம் நாளடைவில் புன்னை நல்லூர் என்றாகி - தற்போது மாரியம்மன் கோயில் என்றே வழங்கப்படுகின்றது.

அம்மன் திருமேனி புற்று மண். அவள் புற்றிலிருந்து வெளிப்பட்டவள்.

தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா மாதந்தோறும் சமயபுரம் சென்று அம்பாளை வணங்கி வழிபடும் வழக்கமுடையவர். 

அப்படி திருத்தல யாத்திரை செய்யுங்கால் - ஒரு மழைக் காலத்தில் காவிரி ஆற்றைக் கடக்க இயலாதபடி வெள்ளப் பெருக்கு!.. 


ஏழைக் குழந்தையம்மா எடுப்போர்க்குப் பாலனம்மா 
பச்சைக் குழந்தையம்மா பரிதவிக்கும் பிள்ளையம்மா!..
உற்றவளாய் நீயிருக்க உன்மடியில் நானிருக்க
பெற்றவளாய் நீயிருக்க என்மனதில் என்ன குறை!..

அம்பாளைத் தரிசனம் செய்ய முடியாமல் வருந்தியபடி உறங்கிய மன்னரின் கனவில் தோன்றிய சமயபுரத்தாள் - 

தஞ்சைக்கு கிழக்கே உள்ள புன்னைவனத்தில், தான் புற்றுருவாய் இருப்பதைக் கூறி - அங்கேயே நாளும் வழிபட்டு மகிழும்படிக்கு அருள்வாக்கு அளித்தாள்.

ஆற்றைக் கடக்க இயலாத மன்னர் பிறவிப் பெருங்கடலைக் கடக்கும்படிக்குப் பேரருள் புரிந்தாள்.

விழித்தெழுந்த மன்னன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டில் புற்றைத் தேடிக் கண்டுபிடித்தார். புற்றிற்கு நிழலாக சிறிய கூரையமைத்து அந்த ஆலயத்திற்கு மானியங்கள் வழங்கினார். 

அதன் பிறகு1728 -1735 ல் -

தஞ்சையை ஆண்ட  துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் பாதிக்கப்பட்டு கண் பார்வை இழந்தாள்.  அவள் தன் துயர் தீர வேண்டி  இந்த அம்பிகையை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றாள்.  


அந்த கால கட்டத்தில்  - அவதார புருஷராகிய ஸ்ரீஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திர ஸ்வாமிகள்  புற்று மண்ணைக் கொண்டு மூலஸ்தான மாரியம்மனின் திருமேனியை வடிவமைத்து யந்த்ர பிரதிஷ்டை செய்து அம்பாளை நிலைப் படுத்தினார். 

மூலஸ்தானத்தில் ஆறடி உயரங்கொண்டு அம்பாள் விளங்குகின்றாள்.

கடும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் வியர்வை முத்துக்கள் தோன்றுகின்றன. முத்து முத்தாக வியர்த்து தானாக உதிர்வதும் உலர்வதும் இன்றும் நிகழும் அதிசயம்!.. 

இதனாலேயே அன்னை முத்துமாரி எனப்பட்டாள்!..  

இத்தலத்தில் வெகு சிறப்பாக நடைபெறுவது பால்குட ஊர்வலங்கள்!..

அபிஷேகங்கள் அனைத்தும் வலப்புறத்தில் சந்நிதியில் விளங்கும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரிக்கும் உற்சவ அம்பிகைக்கும் தான்!..

அம்பாள் திருமேனி புற்று மண் ஆனபடியால் அவளுக்கு நித்ய அபிஷேகங்கள் ஏதும் கிடையாது. 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக் காப்பு மட்டுமே!.. 

அந்த சமயத்தில் ஒரு மண்டல காலம் மூலஸ்தான அம்மனை திரையிட்டு மறைத்து விடுவர்.  

அதற்கு  பிரதியுபகாரமாக ஒரு வெண்திரையில் அம்பாளை சித்திரமாக வரைந்து ஆவாகனம் செய்வர். அம்பாள் சித்ர ஸ்வரூபிணியாக வீற்றிருக்க - அதற்கு தான் அர்ச்சனை, ஆராதனை நடைபெறும். 

ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்களிலும் மூலஸ்தான அம்மனுக்கு  தினமும் இருவேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றின் கலவை கொண்டு திருக்காப்பு நிகழும். 

தைலக் காப்பின் போது அம்பாளின் உக்ரம் அதிகமாகின்றது. 

அதைத் தணிக்க  நீர்மோர், பானகம், இளநீர், தயிர் பள்ளயம் - என, அம்பாளுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றது.

அம்மன் மூலஸ்தானத்தைச் சுற்றிலும் நீர் நிரப்பும் தொட்டி உள்ளது.

கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தினால் நோய் கண்டவர்கள் அம்மனின் மூலஸ்தானத்தை சுற்றியுள்ள தொட்டியில்  குடம் குடமாக தண்ணீரை  ஊற்றி நிரப்புகின்றனர். 

இதனால் மூலஸ்தானத்தில் உஷ்ணம் தணிவதாக ஐதீகம். 

இப்படி தொட்டியில் நீர் நிறைத்தவர் தம் நோய் தீர்ந்து போவது காலகாலமாக கண்ணெதிரில் நிகழ்வது..


வேம்பு ரதமேறி வித்தகியே வாருமம்மா 
பச்சிலை ரதமேறி பார்வதியே வாருமம்மா!..
வெள்ளிப் பிரம்பெடுத்து வீதிவழி வந்திடம்மா
தங்கப் பிரம்பெடுத்து தயவுடனே வந்திடம்மா!..

மூலஸ்தானத்தின் பின்புறம் திருச்சுற்றில் பைரவ உபாசகரான  ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகளின் திருமேனி விளங்குகின்றது.

கோபுர வாசலில் தென்புறம் விநாயகர். விநாயகருக்கு அடுத்து ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ காளியம்மன்  வீற்றிருக்கின்றனர். 

வடபுறம் தண்டாயுதபாணி. அருகில் நாகாபரண விநாயகர். நாக ரூபங்கள். 

சற்று வடபுறமாக வெல்லக் குளம். உடலில் முளைக்கும் சகல விதமான பருக்களும் உதிர்வதற்காக வெல்லம் வாங்கிப் போடுவது இந்தக் குளத்தில் தான். 

இரண்டாம் திருச்சுற்றில் ஸ்ரீ பேச்சியம்மன், காத்தவராயன், மதுரைவீரன், லாட சன்னாசி ஆகியோருக்கு மேற்கு முகமான சந்நிதி. 


மூன்றாம் திருச்சுற்றில் ஆகாயமே கூரையாய் - திருவிளக்கு மேடை.   ஆயிரக்கணக்கான மாவிளக்குகள் ஏற்றப்படுவது இங்குதான்.

அதனை அடுத்து - கன்னி மூலையில் நாக புற்றும் வேப்பமரமும். 
எதிரில் புன்னை மரம்!..


குழந்தை வருந்துறதுன் கோயிலுக்குக் கேட்கலையோ 
மைந்தன் வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கலையோ!..
வருந்தி அழைக்கின்றேன் வண்ண முகங்காணாமல் 
திருந்தி அழைக்கின்றேன் தேவி முகங் காணாமல்!..

கொடிமரம் இருக்கும் அஷ்ட சக்தி மண்டபத்தில் சரபோஜி மன்னரையும் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரையும் சுதை வடிவில் தரிசிக்கலாம்.  

மராட்டிய மன்னர்களின் காலத்தில் மகத்தான திருப்பணிகள் பல செய்யப் பட்டுள்ளன. 

திருக்கோயிலின் வெளியில் தென்புறத்தில் - திருக்குளம். 
அருகில் ஸ்ரீ கல்யாணசுந்தரி சமேத கயிலாய நாதர் திருக்கோயில்.

திருக்கோயிலுக்குப் பின்புறம் சற்று தூரத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்.

ஆடி - மூன்றாம் வெள்ளி பூச்சொரிதல் மற்றும் முத்துப் பல்லக்கு,  ஆவணி கடைசி ஞாயிறு தேரோட்டம், புரட்டாசியில் தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி என திருவிழாக்கள் நடைபெறுகின்றன.  

மாசிமகத்தன்று 1008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடத்தப்படுகின்றது.


உற்றவளாய் நீயிருந்து உத்தமியே காத்திடம்மா 
பெற்றவளே பெரியவளே மங்கலமாய் காத்திடம்மா!..
பக்கத்தில் நீயிருந்து பாலகனைக் காத்திடம்மா 
எக்கணமும் இங்கிருந்து உன்மகனைக் காத்திடம்மா!..

சிறப்பு மிக்க இத்திருக்கோயிலின் ஆவணிப்பெருந் திருவிழாவில் நேற்று வெகு சிறப்பாகத் தேரோட்டம் நிகழ்ந்தது.

கடந்த ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று மகா ஆரத்தியுடன் தொடங்கியது. ஆகஸ்ட்/10 ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மனின் முத்துப் பல்லக்கு வீதியுலாவும் ஆகஸ்ட்/12 அன்று முத்துப் பல்லக்கு விடையாற்றி விழாவும் நடைபெற்றது.

தொடர்ந்து ஆகஸ்ட்/14 அன்று விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, பூர்வாங்க விசேஷ பூஜைகள் நடைபெற்று - ஆகஸ்ட்/15 அன்று வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் துவஜாரோகணம் நிகழ்ந்தது.  

சிறப்பாகத் தொடங்கிய பிரம்மோற்சவ விழாவில் - தினமும் காலையில் படிச் சட்டத்தில் எழுந்தருளி திருவீதி கண்டருளினாள்.

ஆகஸ்ட்/17 அன்று சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் 
ஆகஸ்ட்/24 அன்று அன்ன வாகனத்தில்ஆரோகணித்து அருள் பொழிந்தாள்.

இம்மாதம் ஆறாம் தேதி பெரிய காப்பு படிச்சட்டத்தில் திருவீதி வந்தருளினாள்.

செப்டம்பர்/7 அன்று வெள்ளி அன்ன வாகனத்திலும்,
செப்டம்பர்/8 அன்று சிம்ம வாகனத்திலும்,
செப்டம்பர்/9 அன்று பூத வாகனத்திலும்,
செப்டம்பர்/10 அன்று வெள்ளி ரிஷப வாகனத்தில்  - அன்னை வீதி வலம் வந்தருளினாள்.

செப்டம்பர்/11 அன்று யானை வாகனத்திலும்,
செப்டம்பர்/12 அன்று சேஷ வாகனத்திலும்,
செப்டம்பர்/13 அன்று காலை வெண்ணைத்தாழி அலங்காரம்.
மாலையில் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி வலம் வந்தனள்.

 செப்டம்பர்/14 ஆவணிப் பெருந்திருவிழாவின் சிகரமான தேரோட்டம்.


ஆவணி மாதத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக் கிழமையாகிய நேற்று (செப்டம்பர்/14)  மூலஸ்தானத்தில் அம்மன் ரத்னஅங்கி அணிந்தவளாக பக்தர்களுக்குக் காட்சியளித்தாள்.   


முன்னதாக சிறப்பு பூஜைகளுடன் மாலை நான்கு மணியளவில் தேரினில் எழுந்தருளினாள்.

அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தேர் கோயிலைச் சுற்றி ரதவீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

செப்டம்பர்/16 அன்று விடையாற்றி விழா. மஞ்சள் நீர் தீர்த்த வாரியுடன் கொடி இறக்கப்படுகின்றது. 

அதன் பின்னர் 5.10.2014 அன்று இரவு எட்டு மணியளவில் தெப்ப உற்சவம். 
7.10.2014 அன்று  மாலை ஆறு மணியளவில் விடையாற்றி விழா.

விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தினரும் இந்து சமய அறநிலையத்துறையினரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.


பால்குட ஊர்வலம்
விஜயாலய சோழன் தஞ்சையை மீட்டு புதிதாக நிர்மாணித்த போது   நகரைச் சுற்றி  எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை பிரதிஷ்டை செய்தான். 

அதன்படி - தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன்!.

கால வெள்ளத்தில் புன்னை வனத்தில் புற்றுக்குள் நிலை கொண்ட சக்தி - மராட்டியர் காலத்தில் மாரியம்மனாக வெளிப்பட்டாள். 

அன்று முதற்கொண்டு இன்றளவும் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி கண் கண்ட தெய்வமாக விளங்கி வருகின்றாள்.

தீராத வினைகளைத் தீர்த்து வைத்து திக்கெட்டும் மக்களுக்குத் துணையாகத் திகழ்கின்றாள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் - புன்னை நல்லூர் முத்து மாரியம்மனைத் தரிசிக்கஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். காரணம் -   
அவளன்றி - அவனியில் ஆவதொன்றுமில்லை!..  
அனைத்தும் அவளே!.. அவளன்றி கதியும் ஏதுமில்லை!..

இந்தமனை வாழுமம்மா  ஈஸ்வரியே வந்திடுவாய் 
வந்தமனை வாழுமம்மா வடிவழகி வந்திடுவாய்!..
சொல்லத் தெரியவில்லை சோதியுள்ள மாரிமுத்தே 
சொன்னதும் போதவில்லை நீதியுள்ள மாரிமுத்தே!..

ஓம் சக்தி ஓம்

No comments:

Post a Comment