Saturday, November 8, 2014

பலன் தரும் பதிகம்

திருவேதிகுடி.

திருமணத் தடையினை நீக்கும் திருத்தலமாகிய திருவேதிகுடி

திருஞானசம்பந்தப் பெருமான் - திருப்பதிகம் பாடி அதன் பலன் கூறியருளும் போது ஆணையிட்டு அருளிய திருப்பதிகங்கள் ஐந்தினுள் - திருவேதிகுடி திருப்பதிகமும் ஒன்று .
பன்னிருதிருமுறைகளுள் திருஞானசம்பந்தப்பெருமான் பாடியருளியவை முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 

அவற்றுள் ஆணையிட்டு அருளிய பதிகங்கள் ஐந்தினைப் பற்றிய விவரங்கள் - இங்கே குறிக்கப்படுகின்றன.

திருத்தலம்
கழுமலம் என்று புகழப்படும் சீர்காழி.

 
இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரஹந்நாயகி

தலவிருட்சம் - பாரிஜாதம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் முதலான 22 தீர்த்தங்கள்.

தலப்பெருமை:
காழி என்பது திருத்தலம். இதுவே சீர்காழி.
ஊழிப்  பிரளய காலத்தில் தோணி போல மிதந்த திருத்தலம்.

பன்னிரு தலங்களாக விளங்குவது. காழி, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை,  கொச்சைவயம், கழுமலம் என்பன அவை. 

திருஞான சம்பந்தர்  அவதரித்த திருத்தலம்.

திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை.
திருப்பதிக எண் - 118

மடல்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியு மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகண் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொளி பரந்த வெண்டிரை முத்த மிப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோத மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே. {1}

கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்த னற்றமிழ் மாலை நன்மையா லுரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி யுள்ளமு மொருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே!. 
{11}
* * *

திருத்தலம்
திருவேதிகுடி.

 
இறைவன் - ஸ்ரீ வேதபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ மங்கையர்க்கரசி

தலவிருட்சம் - வில்வம்.
தீர்த்தம் - வேத தீர்த்தம்.

தலப்பெருமை: 
நான்முகன் வழிபட்டு உய்ந்த திருத்தலம். ஈசன் ஒரு சமயம் வாழை மடுவில் தோன்றியருளியதாக ஐதீகம். திருமணத் தடை நீக்கும் திருத்தலம்.

திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை.
திருப்பதிக எண் -78.

நீறுவரி ஆடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.{1}

கந்தமலி தண்பொழினன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்திஅரசாளும் அதுவேசரதம் ஆணைநமதே!.. 
{11}
* * *

திருத்தலம்
திருவெண்காடு.


இறைவன் - ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி

தலவிருட்சம் - ஆலமரம், கொன்றை, வில்வம்.
தீர்த்தம் - சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்.

தலப்பெருமை: 
அம்பிகையே குருவாக இருந்து - நான்முகனாகிய பிரம்மனுக்கு உபதேசித்த திருத்தலம்.

ஸ்வாமியும் அம்பாளும் திருமரமும் தீர்த்தமும் மும்மூன்றாகப் பொலியும் திருத்தலம்.

திருவேதிகுடி திருப்பதிகத்தில் திருமணம் கைகூடிவர அருளிய ஞானசம்பந்தர் திருவெண்காட்டில் பிள்ளைப் பேற்றுக்கு அருள்கின்றார்.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே!..
{2/48/2}

திருவெண்காட்டில் உள்ள முக்குளங்களில் மூழ்கி எழுந்து, மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையுடன் வீற்றிருக்கும் எம்பெருமானை  வணங்கி வழிபடுபவரை மாயை எனும் பேய்கள் விட்டு விலகிப் போகும். நல்ல மகப்பேற்றினை வேண்டிய மனவிருப்பம் இனிதே ஈடேறும். இதில் சிறிதும் ஐயம் வேண்டாம்!..  - என்று நமக்கு நல்வழி காட்டியருள்கின்றார்.

திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை.
திருப்பதிக எண் - 15.

மந்திர மறையவை வான வரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
அந்தமு முதலுடை யடிக ளல்லரே. {1}

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே!.. {11}
* * * 

திருத்தலம்
திருச்செங்குன்றூர் - திருச்செங்கோடு.இறைவன் - ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பாகம்பிரியாள்

தலவிருட்சம் - இலுப்பை.
தீர்த்தம் - தேவதீர்த்தம்.

தலப்பெருமை:
ஐயனும் அம்பிகையும் - மாதொருபாகனாக  பாகம் பிரியாளாக விளங்கும் திருத்தலம். திருமுருகன் செங்கோட்டு வேலனாகப் பொலியும் திருத்தலம்.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் திருத்தலம்.

திருஞானசம்பந்தர் தன் அடியாருடன் திருச்செங்கோட்டுக்கு வருகை தந்த போது கொங்குநாட்டில் விஷக்காய்ச்சல் பரவியிருந்தது. அந்த விஷ ஜூரம் அடியார்களையும் பற்றிக் கொண்டது.

விஷ ஜூரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அடியார்களையும் காத்தருள வேண்டி அருளிய திருப்பதிகம் இது.

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!..

ஒவ்வொரு திருப்பாடலின் இறுதியிலும் ஆணையிட்டருளி கொங்கு நாடு முழுவதும் பிணி தீர்த்தார். மக்களை வாட்டிய விஷ ஜூரம் நாட்டை விட்டே ஒழிந்தது - என்பது பெரிய புராணம் காட்டும் திருக்குறிப்பு.
 
திருநீலகண்டத் திருப்பதிகம் {பொது}
முதலாம் திருமுறை. 
திருப்பதிக எண் - 116 

அவ்வினைக்கு இவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்துஎம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்
{1}

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே!..
 
{11} 
* * *       

திருத்தலம்
திருமறைக்காடு - வேதாரண்யம். 

இறைவன் - ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்
அம்பிகை - ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள்.

தலவிருட்சம் - வன்னி.
தீர்த்தம் - மணிகர்ணிகை.

தலப்பெருமை: 
வேதங்கள் வணங்கிய திருத்தலம்.  சப்த விடங்கத் திருத்தலங்களுள் ஒன்று.

திருவிளக்கின் நெய்யினை உண்ண வந்த எலி தான்  - மகாபலி மன்னனாகப் பிறந்தது.

ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் மகிழ்ந்து உறவாடி இருந்த திருத்தலங்களுள் ஒன்று. 

அக்காலத்தில் தென்பாண்டித் திருநாட்டில் புறச்சமயம் ஓங்கியிருந்தது.

சுவாமிகள் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த  போது -

சிவ சமயத்தை மீட்டெடுக்க  பாண்டிய நாட்டுக்கு எழுந்தருள வேண்டும்!..  

- என பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி எனும் மாதரசி - ஞானசம்பந்தப் பெருமானுக்கு திருமுகம் அனுப்பியிருந்தாள். 

அதைக் கண்ட திருஞானசம்பந்தர் மதுரையம்பதிக்குப் புறப்படலானார்.

அப்போது, அப்பர் சுவாமிகள் - இவ்வேளையில் நாளும் கோளும் நல்லனவாக இல்லையே!.. - என, ஞானசம்பந்தரிடம் தனது கவலையைத் தெரிவித்தார். 

ஏனெனில் புறச்சமயத்தாரின் கொடுமைகளை  அனுபவித்து மீண்டு வந்தவர் அப்பர் சுவாமிகள்.

மனம் வருந்திய அப்பர் சுவாமிகளுக்கு ஆறுதல் கூறி - திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய திருப்பதிகம் இது!..

கோளறு திருப்பதிகம் {பொது}
இரண்டாம் திருமுறை. 
திருப்பதிக எண் - 85.

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..{1}

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{2}

உருவளர் பவளமேனி ஒளிநீறணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{3}

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{4}

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{5}

வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{6}


செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{7}

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{8}

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{9}

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{10}      

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் 
துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து 
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் 
வானில் அரசாள்வர் ஆணை நமதே!.. {11}
* * *
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் 
கோன்முறை அரசு செய்க குறை இலாது உயிர்கள் வாழ்க 
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..
 * * *

No comments:

Post a Comment