Saturday, November 8, 2014

ஆலயந்தோறும் அன்னாபிஷேகம்

ஸ்ரீ லிங்கத்தின் மீதுள்ள அன்னம் - சகல  ஜீவராசிகளுக்குமாக, திருக்குளம் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றது. 

இறையருளைப் பெறுதற்குரிய வழிகளுள் எளிதானது அன்னதானம்!..

மண்ணில் விளைந்த அரிசியும் பசுங்காய்கறிகளையும் கொண்டு - அன்னம் எனும் அமுதத்தினையும் பலவித பதார்த்தங்களையும் அக்கறையுடன் ஆக்கி - பரிவுடன் படைத்து பல்லுயிர்களையும் பாலிப்பதே - அன்னாபிஷேகம்!..

வரும் நட்களில் - 
ஆலயந்தோறும் அன்னாபிஷேகம் மற்றும் அன்னதானம் சிறப்புற நிகழ நம்மால் ஆன உதவிகளைச் செய்து நலம் பெற விழைவோமாக!..

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற 
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே!..(5/1)
திருநாவுக்கரசர்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***






திருஅண்ணாமலையில் -

ஸ்ரீஉண்ணாமுலையாள் உடனாகிய ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில்,

அஸ்வினி நட்சத்திரம் நிறைவாக இலங்கிய புதன் கிழமையன்று அதிகாலை 3.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

மாலை ஆறு மணியளவில் மூலஸ்தானத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நிகழ்ந்தது.

ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர்
அச்சமயம் - திருச்சுற்றில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது.

(ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருமேனியில் செய்யப்பட்ட அன்னாபிஷேக படம் பதிவில் இடம் பெற்றுள்ளது.)

தஞ்சையிலுள்ள சிவாலயங்களிலும் ஸ்ரீகாளியம்மன் திருக்கோயில்களிலும் அன்னாபிஷேகமும் பௌர்ணமி பூஜைகளும் சித்தர் வழி ஜோதி வழிபாடுகளும் சிறப்புடன் நிகழ்ந்தன.

சதயத் திருநாள் அலங்காரம்

சதயத் திருநாள் கோலாகலம்

எனினும்,

ஸ்ரீ கோடியம்மன் திருக்கோயிலிலும் ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலிலும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலிலும் தான் தரிசனம் செய்ய முடிந்தது.

பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மன் சுத்த அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு ஸ்படிகம் எனத் திகழ்ந்தாள்.

அன்னாபிஷேக திருக்கோலம்
பிரம்மாண்டமான பெருவுடையார் திருமேனி அன்னாபிஷேகம் கொண்டு பலவித காய்களாலும் கனிகளாலும் அலங்கரிக்கப்பட்டு இலங்கியது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவதரிசனம் செய்து இன்புற்றனர்.

இரவு ஒன்பது மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கீழ்வானில் பூர்ண சந்திரன் திகழ்ந்திருக்கும் வேளையில் -
நந்தி மண்டபத்தின் அருகில் அருள்மிகு ஆடவல்லானின் சந்நிதிக்கு எதிரில் - நானும் என் மனைவியும் பிரசாதம் உண்டபோது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த மகிழ்ச்சிக்காகத்தான் - மனிதப் பிறவியும் வேண்டுவது இம்மாநிலத்தே!..

சிவலிங்கத்தின் மீது சாற்றப்படும் ஒவ்வொரு சோற்றுப்பருக்கையும் சிவாம்சம் பெறுகின்றது என்பது ஐதீகம். 

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர்  - அபிஷேகம் செய்யப்பட்ட சோற்றினைப் பிரசாதமாக உட்கொண்டால் - குழந்தை பாக்கியம் நிச்சயம் என்கின்றனர்.

சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட அன்னத்தில்- ஆவுடையின் மீதுள்ள அன்னம் மட்டுமே தயிர் கலந்து  பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

No comments:

Post a Comment