Saturday, November 8, 2014

கிருத்திகை


வேலுண்டு வினையில்லை..
மயிலுண்டு பயமில்லை!.. 
குகனுண்டு குறைவில்லை மனமே.. 
குகனுண்டு குறைவில்லை மனமே!..


வெள்ளிக் கிழமையும் வளர்பிறை சஷ்டியும் கிருத்திகையும் முருகனருள் பெறச் சிறந்தவை!.. 

ஏன்!.. எப்படி?.. - என்று கேட்டால் -

வாரத்தின் ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை. திதிகளில் ஆறாவது சஷ்டி. ஆறு தேவ மங்கையரின் அம்சம் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம். சர்வேஸ்வரன் ஆறு திருமுகங்கள் கொண்டே, திருமுருகனைத் தோற்றுவித்தார்.


அருவமும் உருவம் ஆகிஅநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
கந்தபுராணம்.

இப்படி உலகம் உய்ய வேண்டி - திருமுருகன் உதிப்பதற்கு  - பரம் பொருளாகிய சிவபெருமான் தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம்எனும் ஐந்து முகங்களுடன் அதோ முகமும் கொண்டு திருவருள் புரிந்தார். 

ஐயனின் ஆறுமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகள் தோன்றின. அவற்றை வாயுவும் அக்னியும் சேர்ந்து கங்கா நதியில் விட - கங்கை அவற்றை சரவணத்தினில் சேர்த்தனள். 

சரவணத்தின் கமலங்களிலிருந்து ஆறு குழந்தைகள் தோன்றின. 

அந்த ஆறு குழந்தைகளையும் தேவ மங்கையர் அறுவர் தம் திருக்கரங்களில் ஏந்தி சீராட்டி பாராட்டி பாலூட்டி வளர்த்தனர். 

அது கண்டு மகிழ்ந்த ஐயனும் அம்பிகையும் ரிஷப வாகனராக  அறுவருடன் விளையாடும் தன் அன்புச் செல்வங்களைக் காண வந்தருளினர். 

அம்பிகையை நோக்கி ஐயன் - நின் மகன்தனைக் கொண்டு வருக!.. என்றார்.

சரவணந்தனில் தனதுசேய் ஆறு உருத் தனையும் 
இருகரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித்
திருமுகங்கள் ஓராறு பன்னிருபுயம் சேர்ந்த 
உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகம் ஈன்றுடையாள்.

அந்த வேளையில் - கந்தன் என்று பேர் பெற்றனன் கௌரி தன் குமரன்.

கந்தனை வாரி அணைத்து  கொங்கையில் பொழிந்த அமுதினை - அன்பு மிக ஊறியவளாக - தன் மகற்கு அன்பினால் அருத்தினாள் கௌரி.

சிவபெருமானின் திருமுன் திருக்குமரனை இறைஞ்சு வித்திட - ஐயனும் மகனை அன்புடன் அணைத்து மகிழ்ந்து  தன்னருகில் இருத்திக் கொண்டான்.


ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் 
பாலனாகிய குமரவேள் நடுஉறும் பான்மை 
ஞாலமே லுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் 
மாலையா னதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்.

அற்புதக் காட்சியினைக் கண்டு அகமகிழ்ந்த தேவ மங்கையர் அறுவரும் ஐயனையும் அம்பிகையையும் பேரன்புடன் பணிந்து வழங்கினர்.  

தாள் பணிந்த மங்கையர் அறுவருக்கும் பெருமான் தண்ணளி புரிந்தான்.

கந்தன்தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள் 
மைந்தன் எனும் பெயர் ஆகுக மகிழ்வால் எவரேனும் 
நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர் 
தந்தம் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான்!.. 
 கந்தபுராணம்  - சரவணப்படலம்.

கந்தனாகிய இவனுக்கு நீங்கள் அறுவரும் அன்புடன் பாலூட்டி வளர்த்த காரணத்தால் - இது முதல் இவன் உங்கள் மைந்தன் எனும்படி கார்த்திகேயன்என அழைக்கப்படுவான். நீங்களும் சிறப்புற வானில் விண்மீண்கள் எனத் திகழ்வீர்களாக!.. உங்களுக்குரிய கார்த்திகை நாளில் விரதம் இருப்பவர் எவராயினும் அவர்தம் குறைகளை நீக்கி நல்வாழ்வினை அளித்து முக்தியும் அளிப்போம்!..  - என சிவபெருமான் கருணையுடன் மொழிந்தார்..

- என்பது கச்சியப்ப சிவாச்சார்யரின் திருவாக்கு!..

இத்தனை சிறப்புடையது  கார்த்திகை விரதம்.

முதல் நாள் இரவில் ஏதும் உண்ணாதிருந்து கந்தனின் நினைவுகளுடன் துயின்று - கிருத்திகை நட்சத்திரத்தன்று விடியற்காலையில் எழுந்து நீராடி சுத்தமான உடையினை உடுத்து - திருநீறு தரித்து திருக்கோயிலில் சென்று வணங்கி முருகனை வழிபட வேண்டும். 

தண்ணீர் மட்டும் அருந்தி இயன்றவரை திருப்புகழ் திருப்பாடல்களைப் பாராயணம் செய்வதும் முருக மந்திரங்களைத் தியானம் செய்வதும் அவசியம் என்பர் ஆன்றோர்.  

மாலையில் மீண்டும் நீராடி நித்ய வழிபாடுகளைச் செய்தபின் எளிய உணவுடன் விரதத்தினை நிறைவு செய்வது வழக்கம். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனை, அர்ச்சனைகளில் பங்கு கொள்வதும் அடியார்களுக்கு அன்னதானம் செய்வதும்  சிறப்புடையன. 


முருகனின் அருள் பெறுதற்கு எளிய விரதங்கள் ஏற்றவை. 

தன்னுடலைத் தானே வருத்திக் கொள்ளும்படி எந்த ஒரு திருக்குறிப்பும் மக்களுக்கு அளிக்கப்பட வில்லை!.. 

கந்தனின் அருள் பெற அவனை சரணடைதலே பெரியோர்கள் நமக்குக் காட்டியவழி..  

தேவர்களின் இரவுப் பொழுதான தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி பிரதோஷ நேரமாகக் கருதப்படுகின்றது. 

எனவே  - ஆடி மாதம்  விளக்கேற்றும் பொழுது என்றாகின்றது .

எனவே தான்  - ஆடி மாதம் சிறப்பான வழிபாடுகள்  நடத்தப்படுவதற்கு உகந்த மாதமாகின்றது. ஆடிக் கார்த்திகையும்  சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 


வையிற்கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள் !.. 

- என்பது கந்தர் அலங்காரம். 

அது என்ன நொய்யின் பிளவு!?..

ஒரு அரிசி இருபாதியாக உடைந்தால் அது நொய் எனப்படும். 
அந்த நொய் இருபிளவாக ஆனால் - அது குறு நொய்!.. 

திரண்ட செல்வத்திலிருந்து அந்த குறு நொய்யின் அளவாவது அற்றார்க்கும் அலந்தார்க்கும் உதவுங்கள் என்பது அருணகிரியாரின் அருள்வாக்கு!..

அறவழி நின்றால்  - அறுமுகனின் அருள் பெறலாம்!.. என்பது திருக்குறிப்பு.

அறுபடை வீடுகளிலும் மற்றுமுள்ள முருகன் திருச்சந்நிதிகளிலும் ஆடிக் கிருத்திகை சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது.

பஞ்சாமிர்தம் போல - பழனித் திருப்புகழ்


தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான 

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
     கலைகள்பல வேதெ ரிந்து - மதனாலே 
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
     கவலைபெரி தாகி நொந்து - மிகவாடி 

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
     அறுசமய நீதி யொன்று - மறியாமல் 
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
     அநுதினமு நாண மின்றி - யழிவேனோ!.. 

உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
     உலகளவு மால்ம கிழ்ந்த - மருகோனே 
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
     உறைபுகலி யூரி லன்று - வருவோனே.. 

பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமனரு ளால்வ ளர்ந்த - குமரேசா 
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
     பழநிமலை மீதில் நின்ற - பெருமாளே!.. (133)

தேவர்கள் சிறையினின்று மீளும்படியாக 
அசுரர் தம் சேனைகளை  வென்று
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!..

நின் திருவடிகள் சரணம்.. சரணம்!..

No comments:

Post a Comment