Monday, November 10, 2014

வேண்டும் வரம் வழங்கும் ஸ்ரீசக்திவிநாயகர் கோவில்

வேண்டும் வரம் வழங்கும் ஸ்ரீசக்திவிநாயகர் கோவில்
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அரச மரத்தின் கீழ் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகர் அனைவருக்கும் தெரியும். அனைத்து ஆலயங்களிலும் தனிச் சன்னிதியிலும் விநாயகப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஆனால் தனது அன்னை பராசக்தியின் மடியில் அமர்ந்துபடி அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை பார்த்திருக்கிறீர்களா?. 

இத்தகைய ஒரு அபூர்வமான அமைப்பை, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் புதுராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தியாகி குமரன் காலனியில் கண்டு தரிசனம் செய்யலாம். இந்தப் பகுதியில் கடந்த 1971–ம் ஆண்டு விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று இங்கு வசித்து வந்த பொதுமக்கள் தீர்மானித்தனர். 

ஆனால் வழக்கமான விநாயகர் சிலை போன்று வைக்காமல் சற்று வித்தியாசமான விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய அவர்கள் முடிவு செய்தனர். தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் மிகவும் சக்தி வாய்ந்த விநாயகர் சிலை ஒன்றை தேர்வு செய்தனர். அதுதான் அன்னை பராசக்தியின் மடியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீசக்தி விநாயகர். 

சக்தியின் மடியில் :

தமிழ்நாட்டிலேயே நாமக்கல், பழனிக்கு அடுத்த படியாக திருப்பூர் குமரன் காலனியில்தான் இதுபோன்ற விநாயகர் சிலை உள்ளதாக இந்தக் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தாமரை பீடத்தில் அமர்ந்துள்ள சக்தியின் மடியில் ஸ்ரீசக்தி விநாயகர் அமர்ந்துள்ளார். நான்கு கரங்களுடன் காட்சி தரும் ஸ்ரீசக்தியின், முன் வலது கரத்தில் அபயஹஸ்தமும், இடது கரத்தில் வரதஹஸ்தமும் உள்ளது. 

பின் இரு கரங்களில் தாமரை மலர் உள்ளது. அதே போன்று அன்னையின் மடியில் அமர்ந்தபடி நான்கு கரங்களுடன் காட்சி தரும் ஸ்ரீசக்தி விநாயகரின், முன் இரு கரங்களில் மோதகம் மற்றும் தும்பிக்கையும், பின் இரு கரங்களில் பசுசம் மற்றும் அங்குசம் உள்ளது. 

ஸ்ரீசக்தியின் வலது கையும், விநாயகரின் வலது கையும் இணைந்த நிலையில் காட்சி தருவது மிகவும் அரிதானது. இது பிள்ளையின் கையை பிடித்தபடி தாய் கொஞ்சி மகிழ்வது போல் அமைந்துள்ளது. 

சிறப்பு பூஜைகள் :

ஸ்ரீசக்தியின் மடியில் அமர்ந்து அருள்பாலிக்கும், ஸ்ரீசக்திவிநாயகரை வழிபட்டால் வீடு, மனை, தனம், தானியம், செல்வம், அமைதி கிடைக்கப் பெறும் என்பது இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களின் நம்பிக்கை மொழியாக உள்ளது. மேலும் இந்த விநாயகரை வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்றும், மகப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வமும் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். 

தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள், விநாயகப்பெருமானுக்கு பட்டுப்புடவை சாத்தி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். வேண்டும் வரம் வழங்கும் இந்த ஸ்ரீசக்திவிநாயகருக்கு சித்திரைக்கனி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

தல விருட்சம் :

சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் வில்வ மரம் இங்கு தல விருட்சமாக உள்ளது அதைவிட சிறப்பானது. இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீசக்தியை முப்பெரும் தேவியாகவும், ஸ்ரீசக்திவிநாயகர் தடைகளை தகர்த்து, எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் இறைவனாகவும் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். 

இந்த கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்து இருக்கும்

.

No comments:

Post a Comment